மலேசிய சிறையில் வாடும் 43 இந்தியத் தொழிலாளர்கள் விரைவில் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பணிபுரிய அனுமதி பெற்ற நாட்களுக்கும் அதிகமாக அங்கு தங்கி பணிபுரிந்த குற்றத்தின் கீழ் 43 இந்தியர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோலாலம்பூரில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 43 இந்திய தொழிலாளர்களுக்கு உதவுமாறு அவர்களுடன் பணியாற்றிய வேறு 8 தொழிலாளர்கள் இந்திய தூதரகத்துக்கு கடந்த ஜனவரியில் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் மலேசிய அதிகாரிகளுடன் இணைந்து சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.
அப்போது இந்திய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட பணிக்காலம் முடிந்த பின்னரும், அனுமதி உரிமையை புதுப்பிக்காமல், தொடர்ந்து பணியாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தொழிலாளர்கள் மீது தவறு இல்லை என்று தெரிந்ததும் தாய்நாட்டுக்கு திரும்ப அனுப்ப மலேசிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
வரும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரு பிரிவுகளாக 43 இந்தியத் தொழிலாளர்களும் இந்தியா திரும்புவார்கள். அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.