இந்தியாவில் இந்திய கலாச்சாரத்தை கடைபிடிக்கிறோமோ இல்லையோ, அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் வெளிநாட்டு மக்கள் ஏராளமானவர்கள் இந்திய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர்.
நாம்தான் தற்போது அவர்களது கலாச்சரத்தை கையில் வைத்துக் கொண்டு பூனை கையில் சிக்கிய எலியாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்தியர்கள் அதிகம் வசிக்கும் குவைத் நாட்டில் வருகிற 8-ந் தேதி முதல் 14-ந் தேதி முடிய ஒரு வார காலத்துக்கு இந்திய விழா நடக்கிறது.
இந்திய விழா என்றால், இந்தியாவின் சிறப்புகளைக் கொண்டாடும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் இந்திய இசைக்கலைஞர்கள், நடிகர்கள், நடனக்கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை மத்திய அரசின் கலாச்சார துறையும், குவைத் நாட்டின் கலை, கலாச்சாரத்துறையும் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
இந்த விழா, குவைத் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த விழாவிற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் வகையில், இந்திய நெசவாளிகள் நெய்த காஞ்சீவரம், பனார்சி பட்டுப்புடவைகளின் கண்காட்சியும் நடக்கிறது.