Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமானங்களுக்கு பாதை அறிவிப்பு சேவை - இன்மர்சாட் திட்டம்

விமானங்களுக்கு பாதை அறிவிப்பு சேவை - இன்மர்சாட் திட்டம்
, திங்கள், 12 மே 2014 (23:11 IST)
உலகிலுள்ள அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் அடிப்படையான ஒரு பாதை அறிவிப்பு சேவையை இலவசமாக வழங்க பிரிட்டனின் செயற்கைக்கோள் வலயமைப்பு நிறுவனமான இன்மர்சாட் முன்வந்துள்ளது.

மலேசிய விமானம் MH370 கடந்த மார்ச் எட்டாம் தேதி சுவடே இல்லாமல் காணாமல்போனதை அடுத்து இன்மர்சாட் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது.
 
மலேசிய விமானத்தில் இருந்த இன்மர்சாட் கருவியில் இருந்து சற்று நேரம் வந்த மின் அலை ஒலிச் சமிக்ஞைகளைக் கொண்டுதான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதன் எச்சங்களைத் தேட நடவடிக்கை எடுக்கப்பட்டன.
 
இந்நிலையில் பறக்கும் விமானங்கள் இருக்கும் இடம் பற்றி துல்லியமாக தகவல் வழங்கக்கூடிய இலவச சேவை ஒன்றை வழங்க இன்மர்சாட் முன்வந்துள்ளது.
 
பறக்கின்ற ஒரு விமானம் தான் இருக்கும் இடத்தை செயற்கைக்கோள் துணைகொண்டு அறிந்து அந்த விவரத்தையும் அது பயணிக்கும் வேகம், உயரம் பற்றிய தகவலை இன்மர்சாட்டின் உலகலாவிய செயற்கைக்கோள் கட்டமைப்புக்கு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை அனுப்பிக்கொண்டிக்கும் வகையிலான கட்டமைப்பு இது.
 
"உலகிலுள்ள அகலமான விமானங்களில் தொண்ணூறு சதவீதமானவற்றில் இன்மர்சாட்டின் கருவி ஏற்கனவே இருக்கிறது. எனவே எவ்வித செல்வும் இல்லாமல் விமானப் போக்குவரத்துத்துறை உடனடியாக தீர்வு காண்பதற்கான வழி இதுதான்" என இன்மர்சாட்டின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ் மெக்லவ்லின் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
சேட்டிலைட் டிராக்கிங் என்று சொல்லப்படுகின்ற செயற்கைக்கோள் மூலமாக பாதையை அறிவிக்கும் முறையை விமான நிறுவனங்கள் பயன்படுத்த தயங்குவது பெரும்பாலும் அது அதிக செலவாகும் என்பதால்தான்.
 
விமானங்கள் பறக்கும் இடத்தை அறிவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்காக சர்வதேச சிவில் விமானப் பயண நிர்வாக அமைப்பான ICAOவின் ஏற்பாட்டில் கனடாவின் மாண்ட்ரியல் நகரில் மாநாடு ஒன்று ஆரம்பிக்கவிருப்பதற்கு முன்பாக பிரிட்டிஷ் நிறுவனமான இன்மர்சாட் இந்த அறிவிப்பை செய்துள்ளது.
 
மலேசிய விமானம் காணாமல் போன பின்னணியில் உலக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை ICAOவும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான IATAவும் பரிசீலித்து வருகின்றன.
போயிங் 777 ரகத்திலான பெரிய விமானம் ஒன்று இப்படி மறைந்து போனது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
 
ஒரு விமானத்தினை அடையாளம் காட்டக்கூடிய கருவிகள் அதன் உள்ளிருந்தே நிறுத்தப்படலாம் என்பதும், பூமியில் உள்ள ராடார்களின் வீச்சை விட்டு நகர்ந்து விட்டால், ஒரு விமானத்தின் இடம் பற்றி கண்டறிய வழியில்லாமல் இருப்பதும் பலருக்கும் ஏற்க முடியாத விஷயமாக இருக்கிறது.
 
இப்படியான சூழ்நிலையில், இன்மர்சாட் வழங்க முன்வந்திருக்கும் சேவை பறக்கும் விமானத்தின் இடத்தை எப்போதுவேண்டுமானாலும் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் என்றால், அது நிச்சயம் விமானப் போக்குவதத்துக்கு துறைக்கு பெரிய உதவியாக அமையும் எனக் கூறலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil