நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும்.
நவராத்திரியில் வீட்டில் வைக்கப்படும் கொலு மேடையானது, 9 படிகள் கொண்ட தாக அமைக் கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன.
ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன் என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.
அன்னையின் அந்த வார்த்தையை சுரதா என்ற மன்னன் கடைப்பிடித்து, தன் பகைவர்களை வீழ்த்தியதோடு, பலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுதலை அடைந்தான். எனவே கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது என்பது நவராத்திரி விழாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.
ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும், அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.