விரதமிருப்பது என்பது உண்ண வேண்டிய உணவை உண்ணாமல், உடல் சுகங்களை புறக்கணித்து இருப்பதாகும். இதனை செய்வதால் வயிற்றுக்கு மட்டும் நன்மை கிடைப்பதில்லை. மனதிற்கும் சேர்த்துத்தான் பயிற்சி கிட்டுகிறது.
அது எப்படி விரதமிருந்தால் மனதிற்கு பயிற்சி என்று கேட்கலாம். அதாவது, நம் வீட்டில் வகை வகையான உணவு பொருட்கள் இருந்தும் அதனை உண்ணாமல் இருப்பது என்பது நமது மன வலிமையையேக் காட்டுகிறது.
இப்படி விரதமிருப்பதால் நமது மன வலிமை கூடுகிறது என்கிறது ஆய்வு ஒன்று.
பொதுவாக, எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்து, இடைவிடாது வயிற்றுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு வேளை சாப்பிடாமல் இருந்து வயிற்றுக்கு ஓய்வு கொடுத்தால் அது ஜீரண மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இதனால் நமது ஜீரண உருப்பின் செரிமானத் தன்மை அதிகரிக்கும் என்று ஏற்கனவே பல ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும், வாரத்தில் ஒரு நாள் விரதமிருப்பதால் நமது வயிற்றுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஓய்வு அளிக்கப்படும் என்பதற்காகத்தான், அந்த காலத்தில் நிறைய விரத முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன.
ஆனால் இந்த காலத்தில் அவற்றை எல்லாம் நாம் பின்பற்றுவதும் இல்லை, பின்பற்ற சரியான வழியும் இல்லை.
விரதமிருப்பது வெறும் வயிற்றுக்கு மட்டுமே பலனளிக்கும் என்று நினைத்திருந்த நமக்கு, விரதமிருப்பதால் மன வலிமை கூடுகிறது என்ற மற்றொரு செய்தி முத்தாய்ப்பாய் அமைகிறது.
சாப்பிட எத்தனையோ சுவையான பொருட்கள் இருந்தும் அவற்றை தவிர்த்து, நமது பசியை அடக்கி இறைவனை நினைக்கும்போது நமது மன வலிமையின் திறனை தெரிந்து கொள்ள முடியும்.எனவே, இன்றில் இருந்து வாரம் ஒரு நாளை தேர்வு செய்து விரதமிருப்பது என்ற முடிவுக்கு வர வேண்டும். ஏதோ அரைகுரையாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு என் விரதமிருக்க வேண்டும் என்ற சப்பைக் கட்டெல்லாம் வேண்டாம்.விரதமிருப்பது முழுமையாக வயிற்றுக்கு ஓய்வு அளிக்கும் முறையாகும். அதை சரியாகப் பின்பற்றிப் பாருங்கள். உங்கள் மன வலிமையை அறிந்து கொள்ளுங்கள்.