Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடல் புழுக்கள் ஏன் வருகின்றன? தீர்வுகள் என்ன?

குடல் புழுக்கள் ஏன் வருகின்றன? தீர்வுகள் என்ன?
குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும்.
குடல் புழுக்கள் வந்த உடன் அழிப்பதற்கு பதிலாக அவை வயிற்றில் சேராமல் பாதுக்காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. குடல் புழுக்களை அழிக்க சில இயற்கையான காய்கறிகளும், இயற்கை மருந்துகளும் உள்ளன.
 
காரணங்கள்:
 
அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது,  அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத்  தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.
 
சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
 
செய்ய வேண்டியவை:
 
சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும். குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.  திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது. கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக்  கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.
 
சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள். நகங்களைப்  பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும். குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.
 
குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
 
ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.
 
காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் சமைக்கும், சாப்பிடும் உணவுகள் சுத்தமாகவும் நச்சுக்கள் இன்றியும் இருக்கும்.
 
நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளிகளை நீக்கும் வெள்ளரிக்காய்