கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சுரக்கா விட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, அல்லது சுரந்த இன்சுலின், சரியாக வேலை செய்யாவிட்டாலோ நீரிழிவு நோய் வரும். நீரிழிவு நோய் வருவதைத் தடுப்பதற்கு கணையத்தை பாதுகாப்பது மிக முக்கியம்.
கணையம் தான் உணவை செரிக்க உதவும் நொதிகளை சுரக்கிறது. மேலும் உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து மற்ற பாகங்களுக்கு அனுப்பும் தொழில் செய்வதும் கணையமே. கணையம் தான் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது. இவ்வளவு வேலையை செய்யும் கணையத்தில் ஏராளமாக நச்சுக்கள் சேரும்.
எனவே கணையத்தில் சேரும் நச்சுக்களை நீக்கவும், கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒருசில உணவுப் பொருளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பயோஆக்டிவ் பொருள், கணையத்தில் எவ்வித கட்டிகளும் காயங்களும் ஏற்படாமல் நல்ல பாதுகாப்பு தரும். எனவே முடிந்த வரையில் தினசரி உணவில் பூண்டு சேர்த்து வருவது நலம்.
தயிர் சாப்பிட்டால், கணையத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமைப் பெறும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. இவை கணைய புற்றுநோய் அண்டுவதைத் தடுக்கும். ஏனெனில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை கொண்டது தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இதேபோல் ஆப்ரிகாட், கேரட், சோளம் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. இவற்றையும் இடையிடை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பசலைக்கீரையில் இரும்புச்சத்து, விற்றமின் பி போன்ற கணையத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் 2-3 முறை பசலைக்கீரையை உணவில் சேர்த்து கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.