வாழைப்பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிவோம்...
வாழைப்பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிவோம்...
வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது. இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.
நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன.
வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன. வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.
* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
* உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.
* சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
* கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.
* சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.