கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடம் உண்டு.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.
புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு உணவு மூலம் கிடைப்பது இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை.
கொள்ளின் பலன்கள் கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும்.
கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.
பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த என இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும் கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது.