ஸ்ட்ராபெர்ரி மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக் குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.
அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.
5 பழங்களில் 250 மிலி அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 10, உரித்த ஆரஞ்சு சுளைகள் 10, பழுத்த, உரித்த நாட்டு வாழைப்பழம் 4, சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை 50 கிராம் ஆகியவற்றை எடுத்து தேவையெனில் நெல்லிக்காய் சாறு 10 மிலி சேர்த்து நன்கு அரைத்து பழச்சாற்றை பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையெனில் சற்று நீர் சேர்த்து இளக்கமாக அரைக்கலாம். ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. தோல் வறட்சி நீங்குவதுடன், இதிலுள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.
சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.