திருநீற்றுப் பச்சிலை செடி மருத்துவகுணம் நிறைந்தது. திருநீற்றுப்பச்சை இலையைத்தான் பேசின் என்று அழைக்கிறோம். சப்ஜா விதை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.
ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து. மலச் சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.
சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.
சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.
கோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
முகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
இருமல் கட்டுப்பட இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும். வெள்ளைபடுதல் குணமாக இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன் காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.