கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கின்றோம். நம் செரிமானத்திற்கு உதவி, இன்றியமையாத பணியை இந்த பித்த நீர் தான் செய்கின்றது.
முக்கியமாக அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது அதற்கு ஏற்றது போல் பித்த நீர் சுரந்து செரிமாணத்திற்கு உதவுகிறது.
உடலில் பித்தம் அதிகமாகும்பொழுது வாய்வு பிரச்சனை, பாதம் மற்றும் உதடுகளில் வெடிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வறட்சியாகவும், கடினமாகவும் காணப்படும்.
குமட்டல், வாந்தி, அடிக்கடி தலைசுற்றல், மலச்சிக்கல், இளநரை, உடல்சூடு, காலை எழுந்தவுடன் கசப்பு தன்மையுடன் வாந்தி அல்லது மஞ்சள் நிறத்தில் வாந்தி வருவது, வாய் கசப்பு தனியாக இருப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பதினால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும் உடலில் பித்தம் அதிகமாகும். அதேபோல் மது மற்றும் புகைபிடித்தல் போன்ற மோசமான பழக்கங்களினால் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உடலில் பித்தத்தை அதிகரிக்கும்.
தினமும் அளவுக்கு அதிகமாக டீ, காபி போன்ற பானங்களை அருந்தும்பொழுது பித்தம் அதிகரிக்கும். தினமும் அதிகநேரம் கண்விழித்து கொண்டு சரியாக உறங்காமல் இருந்தாலும் உடலில் பித்தம் அதிகரிக்கும்.
மன அழுத்தம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளினால் உடலில் பித்தம் அதிகரிப்பதுடன் பலவகையான ஆரோக்கியமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். அதேபோல் நொறுக்கு தீனிகள், மாமிச உணவுகள், காரம் மற்றும் புளிப்பு சுவையுடைய உணவுகளை அதிகளவு உற்கொள்வதினாலும் உடலில் பித்தநீர் அதிகமாக சுரக்கும்.
50 கிராம் சுக்கு பவுடர், 50 கிராம் நெல்லிக்காய் பவுடர், 50 கிராம் சீரகம் பவுடர் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பவுடரை ஒரு ஸ்பூன் அளவு கலந்து அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அருந்தி வர பித்தம் குணமாகும்.
சுக்கு, சீரகம், மல்லி மற்றும் தேன் இந்த நான்கு பொருள்களையும் சமளவு எடுத்து தேனீர் தயாரித்து தினமும் அருந்தி வர பித்தம் குணமாகும். அதாவது சுக்கும் சீரகம் மற்றும் மல்லி இவை மூன்றையும் சம அளவு எடுத்து அடுப்பில் மிதமான சூட்டில் வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
பின் ஒரு கிளாஸ் நீரில் ஒரு டீஸ்பூன் தயார் செய்த பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின் ஆறியதும் தேவையான அளவு தேன் அல்லது பனை வெல்லம் கலந்து தொடர்ந்து அருந்தி வர பித்தம் குணமாகும்.