பவன என்றால் பிராணவாயு முக்த என்றால் விடுவிப்பது. ஆசனம் என்றால் இருக்கை உடலில் பிராண வாயு செல்லும் பாதைகளில் ஏற்படும் அடைப்பை நீக்கி பிராண வாயுவை மிகச் செய்வதால் இப்பயிற்சிக்கு பவன முக்தாசனம் என்று பெயர்.
பயிற்சி 1 :
கால் விரல்களை வளைத்தல் : தரை விரிப்பின் மேல் கால்கள் இரண்டையும் நீட்டி வைத்து (தண்டாசனத்தில்) அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருகால் விரல்களையும் முன் நோக்கி நிதானமாக வளைக்கவும். மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி நிதானமாக இரு கால் விரல்களையும் பின்னோக்கி வளைக்கவும். இது ஒரு சுற்று பயிற்சி ஆகும். இப்படி 10 சுற்று பயிற்சி செய்யவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: பவன முக்தாசனத்தில் வரும் ஒவ்வொரு பயிற்சியிலும் உடலின் எந்த பகுதிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதோ அந்த பகுதியை மனதால் நினைத்து செய்யவும்.
பயிற்சி 2 :
குதிகாலை வளைத்தல் : தண்டாசனத்தில் அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருபாதங்களையும் நிதானமாக முன்னோக்கி வளைக்கவும். மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி இருபாதத்தையும் பின்நோக்கி வளைக்கவும். இது ஒரு சுற்று ஆகும். இப்படி 10 சுற்று பயிற்சி செய்யவும்.
பயிற்சி 3 :
குதிகாலை சுழற்றுதல்: தண்டாசனத்தில் அமரவும். நிதானமாக இரு பாதங்களையும் இடமிருந்து வலமாக 10 முறை சுழற்றவும். பிறகு இரு பாதங்களையும் வலமிருந்து இடமாக 10 முறை சுழற்றவும். இப்பயிற்சியில் கீழ்நோக்கி கொண்டு போகும் போது மூச்சை வெளியே விடவும். பாதத்தை நேராக கொண்டு வரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.
பயிற்சி 4 :
குதிகாலை முன்னுக்கும், பின்னுக்குமாக சுழற்றுதல் : தண்டாசனத்தில் அமரவும். வலது முழங்காலை மடக்கி குதிகாலை நீட்டி வைத்திருக்கும் இடது காலின் தொடைக்கு வெளியே வைக்கவும். வலது கை விரல்களால் வலது கால் மேல்பகுதியை பிடிக்கவும். நிதானமாக பாதத்தை இடமிருந்து வலமாக 10 முறையும், வலமிருந்து இடமாக 10 முறையும் சுழற்றவும். பிறகு இடது காலை மடக்கி மேல் கண்ட முறைப்படி செய்யவும். இப்பயிற்சியில் பாதத்தை மேலே தூக்கும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். கீழே இறக்கும்போது மூச்சை வெளியே விடவும்.
பவனமுக்தாசனம் அடிவயிற்றுப் பகுதி, மலக்குடல் பகுதி அமுக்கப்படுவதால் மலச்சிக்கல் நீங்கி மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்கின்றது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பயிற்சி செய்தால் மலச்சிக்கல் நீங்கும். மலச்சிக்கல் இல்லாதவர்கள் பயிற்சி செய்தால் எவ்வளவு வயதானாலும், மலச்சிக்கலில் சிக்காமல் சிறப்பாக வாழலாம்.
மூல வியாதி நீங்கும். ரத்தக் கோளாறுகள் நீங்கும். குடல் வால்வுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் நீங்கும். அதிக வயிற்றுத்தசையை குறைக்கின்றது.