முள்ளங்கிக் கீரையை எண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட நீரடைப்பு, நீர் சுருக்கு நீங்கும். மேலும் சில கீரை வகைகள் உங்களுக்குப் பயனளிக்கக் கூடியவை. தண்டுக் கீரையின் இலையும் தண்டும் பயன்படும்.
மலமிளக்கி கொதிப்பை அடக்கும். வயிற்றுக் கடுப்பு, ரத்தபேதி, நீர்சுருக்கு குணமாகும். தண்டுகீரையைச் சார்ந்த சிறுகீரையைப் பயன்படுத்தினால் கண் புகைச்சல், பாதரசம், நாபி முதலியவற்றின் விஷசக்தி, நீர்சுருக்கு, புண், வீக்கம் இவற்றைப் போக்கும். வயோதிகத்திலும் உங்களுக்கு அழகைத் தரும்! பசலைக் கீரை நீர்சுருக்கு, நீர்க்கடுப்பு, ருசியின்மை, வாந்தி முதலியவற்றுக்கு நல்லது.
சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும் பருப்புக் கீரை இனிப்பும் புளிப்பும் உள்ளது. உடல் கொதிப்பை அடக்கும். குடல் வறட்சியை அகற்றி மலத்தை இளக்கும். உள் புண்ணை ஆற்றும்.
கார்ப்பும், துவர்ப்பும், கடுமணமும் கொண்ட புதினாக்கீரை, உள்கொதிப்பை அடக்கும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும். வயிற்று வாயுவை தடங்கலின்றி வெளியாக்கும். உடல் வலியைப் போக்கும். செரிமானமாகாமல் வரும் பெருமலப் போக்கைக் கட்டுப்படுத்தும். அதிக அளவில் உணவேற்கச் செய்யும்.
ஜவ்வரிசியை நீங்கள் கஞ்சியாகவோ, கூழாகவோ, செய்து சாப்பிட்டால் இனிய புஷ்டிதரும் உணவுப் பொருளாகப் பயன்படுவதுடன் நீர்த்தாரை குடலின் அழற்சியையும் நீக்கும். கடுப்பு, சீதபேதி, நீர்ச்சுருக்குள்ளவருக்கு ஏற்ற உணவு.
சீரகத்தையும் சிறிது கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகிவிடும்.
மணத்தக்காளி இலையைச் சாறாகப் பிழிந்தும், உப்பு போடாத வற்றலை வெந்நீரில் ஊற வைத்தும் சாப்பிட, கல்லீரல், மண்ணீரல் கெட்டு வரும் வீக்கம், சிறுநீர்த்தடை, மார்பு வலி, கீழ் வாயு முதலியவை குணமாகும். சிறுநீர் அதிகமாகப் பிரியும். வீக்கம் குறையும். வாயுத்தடை நீங்கும். கெட்டியான சளியுடன் கூடிய இருமல் இழுப்பு நிலையில் இதன் வற்றலைத் தூளாக்கி 1 ஸ்பூன் அளவு தேனில் சாப்பிட நல்லது.