கருஞ்சீரகம் எண்ணிலடங்கா பல வியாதிகளைக் குணப்படுத்த உதவுகின்றது. தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும்.
கருஞ் சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பை கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து.
குழந்தைப்பேறு அடைந்த பெண்களின் கர்ப்பப்பையில் அழுக்குகள் இருக்கக்கூடும். கர்ப்பப்பையைத் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். இதனால் எதிர்காலத்தில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட தொல்லைகள் வராமல் தடுக்கலாம்.
கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் எடுத்துக்கொள்ளும் போது கர்ப்பப்பையில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி சுத்தமடையும்.
சருமம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க கருஞ்சீரகப்பொடியை குளியல் பொடியோடு சேர்த்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.
கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது. ஆதலால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கருஞ்சீரகத்தை தகுந்த முறையில் எடுத்துக்கொள்ளலாம். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை இவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.
வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும்.