தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன. பொதுவாக, முன்பெல்லாம் நம் முன்னோர் தேற்றாங்கொட்டையை சேறும் சகதியுமாக கலங்கிக் காணப்படும் நீரைத் தெளியவைக்கப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
குளம், ஊருணி போன்றவற்றில் இருந்தே குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் நீர் பெறப்பட்டது. அத்தகையச் சூழலில் கலங்கலாக இருக்கும் நீரை அப்படியே குடிக்க முடியாது என்பதால், தேற்றான்கொட்டையால் நீரைத் தெளிய வைத்து பயன்படுத்தினர்.
பொதுவாக இது வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல், மூத்திரக்கடுப்பு, ரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. மந்தத்தை உண்டாக்கும் இது கண்ணுக்கு சிறந்த மருந்து. இவை எல்லாவற்றுக்கு மேலாக தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்டது தேற்றான்மரம்.
தேற்றான்கொட்டைத் தூள், திரிகடுகுத் தூள், திரிபலாத் தூள், சீரகத் தூள், சித்தரத்தைத் தூள் ஆகியவற்றுடன் பால் சேர்த்து பசைபோல் தயாரித்துக்கொள்ளவும். அதன் பிறகு இதனோடு நான்கு பங்கு வெல்லம், ஒரு பங்கு நீர்விட்டு பாகு தயாரித்து அதனுடன் ஏற்கெனவே பசைபோலத் தயாரித்து வைத்திருக்கும் மருந்துக் கலவையைச் சேர்த்துக் கிளற வேண்டும். இது அல்வா பதத்துக்கு வந்ததும், நெய்விட்டுக் கிளறி இறக்க வேண்டும். நெய் தனியாகப் பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, தேன் சேர்த்துக் கலக்க வேண்டும். இந்த லேகியத்தை காலை, மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் தேறி வரும்.
தயார் செய்ய முடியாதவர்கள் சித்த ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் . தேற்றான் கொட்டை லேகியம் மற்றும் அஸ்வகந்தா லேகியம் இரண்டையும் வாங்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் தேறுவதுடன் உடலும் நன்றாக வலுவடையும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனமடைவதுடன் தூக்கம் கெட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் தேற்றான்கொட்டை தூளையும், செண்பகப் பூவையும் நீர்விட்டு கொதிக்க வைத்து, பால் சேர்த்துக் குடித்து வந்தால், இந்தப் பிரச்சனை சரியாகும்.