முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.
உறுதியான கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எந்ததெந்தச் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியம், எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
முட்டையில் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும் பயோட்டின் என்கிற விட்டமினும் உள்ளது.
பீன்ஸில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.
ஓட்ஸில் விட்டமின் பி-யும் தாதுஉப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு நிறமளிக்கக் கூடியது. ஓட்ஸ்சில் உள்ள சத்துக்கள் முடி வேகமாகவும் கறுமையான நிறத்திலும் வளரத் தேவையானவையாகும்.
விட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு. கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன.
பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். தோலுக்கு நல்ல நிறத்தையும் முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.