கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங் கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 5 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும்.
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்.
இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி மருந்து’ கற்றாழைச் சாறுதான்.