உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தி, பேயத்தி ஆகும்.
அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை கொடுக்கலாம்.
சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
அத்தியில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வகள கூறுகின்றன. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப் பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து, வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும், சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.