Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.


 
 
வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
 
வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது. மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
 
ஒருவகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்பட்டு துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க பயன்படுகிறது. வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை நூற்பு ஆலைகளிலும், அச்சு தொழில்களிலும் பயன்படுகிறது.
 
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.
 
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 
வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.
 
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.
 
வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.
 
மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும். 
 
வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.
 
ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும்.
 
இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
 
வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும். 20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.
 
100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.
 
200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும்.
 
தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.
 
வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.
 
வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூச, பரு மறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூக்கமின்மையை குணமாக்கும் அக்குபஞ்சர்