வயிற்றுப் பிரச்சினையிலிருந்து விடுபட, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து, கலந்து குடிக்கவும். சீரகம் வயிற்று வலி மற்றும் குடல் வாயுவை நீக்குகிறது.
எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்” என விடாதிருக்கும் விக்கலுக்கு, திகில் பயமெல்லாம் காட்ட வேண்டாம். 8 திப்பிலியும் பத்து சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.
அடிக்கடி ஜீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றை சமபங்கு எடுத்து நன்கு மையாகப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்துக் கொடுக்க பசியை தூண்டும்.
சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.
சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.
சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.