வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது.
வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி கொண்டது வாழைப்பூ.
வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
வாழைப்பூவானது மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.