பிரம்மந்தண்டு இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும்.
இதன் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விஷம் இறங்கும். சமூலச்சாறு 30 மி.லி. கொடுத்துக் கடிவாயில் அரைத்துக் கட்ட பாம்பு விடம் தீரும் பேதியாகும். உப்பில்லாப் பத்தியம் இருத்தல் வேண்டும்.
இலையை அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை குணமடையும். உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.
பொன்னாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை, கரிசாலை போல கண் நோய்க்கு நல்ல குணமளிக்கும். பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும். இதன் இலையை ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண்வலி, சதை வளருதல், சிவத்தல், அரிப்பு, கூச்சம் ஆகியன குணமாகும்.
இதன் விதையை நெருப்பிலிட்டுப் புகைத்து அப்புகையை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் புழு விழும். வலி தீரும், செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்க பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும்.
இதன் சாம்பல் பொடி 2 கிராம் தேனில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும், இரு வேளை 48 நாள் சாப்பிட வேண்டும்.
50 மி.லி.பன்னீரில் ஒரு கிராம் இதன் சாம்பலைக் கரைத்து வடித்த தெளி நீரைச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம். கண் எரிச்சல், வலி, சிவப்பு ஆகியவற்றிக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்த குணமாகும்.