அவுரி முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது. இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும்.
விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.
தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும். வேர் விஷத்தை முறிக்கும். கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.அவுரி சிறுசெடி வகையைச் சார்ந்தது, பயிரிடப்படுபவை, புதர்ச்செடிகள் போல அடர்த்தியாக வளர்ந்திருக்கும். இலைகள் ஆழ்ந்த பச்சை நிறமானவை. இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் பெருமளவு இயற்கையாக விளைகின்றது.
நீலநிறச் சாயம் இதன் வேர் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. அவுரியின் இலை மற்றும் வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாதுப் பொருட்களை மருத்துவ ரீதியாக சுத்தம் செய்வதற்கு இது மிகச் சிறந்த தாவரமாக உபயோகிக்கப்படுகின்றது.
காணாக்கடி, ஒவ்வாமை, தோல் நோய்கள் குணமாக பசுமையான அவுரி இலை ஒரு கைப்பிடியளவு சேகரித்துக் கொள்ள வேண்டும், அத்துடன், சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, 1 டம்ளராக காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் 7 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.
மஞ்சள் காமாலை தீர அவுரி இலைகளை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, ஒரு டம்ளர் காய்ச்சிய வெள்ளாட்டுப்பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் குடித்துவர வேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.
வெள்ளைப்படுதல் குணமாக அவுரி வேர், யானை நெருஞ்சில் இலைகள் சம எடையாக எடுத்துக் கொண்டு, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, மோரில் கலந்து காலையில் 10 நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.