Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடதுசாரிகள் கூட்டாக மக்களைச் சந்திக்க முடிவு

Advertiesment
இடதுசாரிகள் கூட்டாக மக்களைச் சந்திக்க முடிவு
, புதன், 25 மார்ச் 2009 (17:56 IST)
எதிர்வரும் 15ஆவது மக்களவைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இநதிய கம்யூனிஸ்ட், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) ஆகிய 4 கட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து மக்களைச் சந்திப்பது என முடிவு செய்துள்ளன.

இடதுசாரிக் கட்சிகள் நான்கும் கூட்டாகச் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிந்ததும், 4 இடதுசாரிக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க முடிவெடுத்தன.

அப்போது தேர்தலில் மக்களின் முடிவை ஏற்று, பாஜகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் புறக்கணித்ததைக் கருத்தில் கொண்டு, அந்த முடிவை எடுத்ததாக் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கூறினர்.

காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரிக் கட்சிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவை அளித்தன. அதற்காக தேசிய அளவில் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அதனை காங்கிரஸ் தலைமையிலான அரசு கடைபிடிக்கும் என்று நம்பப்பட்டது.

மதச்சார்பின்மை மற்றும் மக்களின் பொருளாதார நலன்களில் கடந்த 5 ஆண்டுகளில் இடதுசாரிக் கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு பங்காற்றியுள்ளன.

அமெரிக்காவுடன் அடிமைத்தனத்திற்கு துணைபோகாமல் இருப்பதற்கும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் இடதுசாரிக் கட்சிகள் முக்கியப் பங்கினை வகித்தன.

பொது செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் ஆதரவு திட்டங்களை செயல்படுத்துவதிலும் இடதுசாரிக் கட்சிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு நில உரிமை, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தியது, அதனை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது ஆகியவையும் இடதுசாரிக் கட்சிகளின் பங்காக அமைந்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு, இப்பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன்னிச்சையாக கொண்டு வரும் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து தடுத்தன.

பிஹெச்ஈஎல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையையும் இடதுசாரிக் கட்சிகள் தடுத்தன.

லாபகரமாக இயங்கி வரும் சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கும் இடதுசாரிக் கட்சிகள் தடைபோட்டன.

நலிவடைந்த நிலையில் இருந்த சில பொதுத்துறை நிறுவனங்களை முன்னேற்றுவதற்கும், வேளாண்துறையில் அதிக முதலீட்டை செய்வதற்கும், கல்வி, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கும் இடதுசாரிக் கட்சிகள் குரல் கொடுத்தன.

வேலைவாய்ப்பை பாதிக்கும் நடவடிக்கைகள், வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வதற்கும் இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மிக முக்கியமான நடவடிக்கையாக நிதித்துறையைக் கூறலாம். பொருளாதாரத்தை மேலும் சுதந்திரமாக்கியதுடன், வெளிநாட்டு முதலீடுகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சீரமைப்புச் சட்டத்தை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

பங்குச் சந்தை முதலீடுகளில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதியை பயன்படுத்துவதற்கும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டையும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்தன. வேளாண் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் புகுவதை எதிர்த்ததுடன், சில்லரை வணிகத்தில் அந்நிறுவனங்கள் நுழைவதையும் கண்டித்தன.

கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியா - அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் வாஷிங்டனில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வலியுறுத்தப்பட்டது.

ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்கா வலியுறுத்தும் பொருளாதாரக் கொள்கை போன்றவை அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆனால் இதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள காங்கிரஸ் அரசு முடிவெடுத்த போது அதனை எதிர்த்து அரசுக்கு அளித்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொள்ள நேரிட்டது.

ஆனால், பெரிய அளவில் பண பேரம் நடத்தப்பட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை விலைகொடுத்து வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

அரசு தப்பித்துக் கொண்ட நிலையில்தான், உலக அளவில் பொருளாதாரச் சரிவு நிலை ஏற்பட்டது. இத்தருணத்தில் எஞ்சியுள்ள ஆட்சிக்காலத்தையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவு செய்துள்ளது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்து மேலும் நிதி முதலீட்டை மத்திய அரசு துரிதப்படுத்தியது. இதன்மூலம் பின்வழியாக வெளிநாட்டு முதலீடு வர ஏதுவாகிறது.

உலக அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார சரிவினால் வேலையிழந்த, லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

பொருளாதார பாதிப்பு வேளாண்துறையையும்,
விவசாயிகளையும் பாதிக்கச் செய்யும் என்பதை அரசு புறக்கணித்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. பாஜக மற்றும் மதவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவதில் ஒருபோதும் இடதுசாரிக் கட்சிகள் விட்டுக்கொடுக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் கூட்டு உள்ளிட்ட எந்த செயல்பாடுகளையும் மாற்றிக்கொள்ளவில்லை.

நாடு முழுவதும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அக்கட்சி கொண்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரு, ஒரிசா கண்டமால், வதோதரா, அலிகார், கோரக்பூர், மாவ், இந்தூர், ஜபல்பூர், பெங்களூரு, துலியா போன்ற இடங்களில் மதவாத வன்முறைகள் நடைபெற்றதை உதாரணங்களாகக் கொள்ளலாம்.

பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ கொள்கைகளின் அடிப்படையிலான அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மதவாதத்திற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் குரல்கொடுத்து வந்துள்ளன. அரசியல், கொள்கை, அமைப்பு ரீதியில் கடுமையான எதிர்ப்பை இடதுசாரிக் கட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.

பயங்கரவாத வன்முறைகள் அனைத்து வடிவிலும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதே இடதுசாரிக் கட்சிகளின் கருத்தாகும்.

முதலாளிகள், நிலச்சுவான்தார்கள், மிகப்பெரிய ஒப்பந்ததாரர்கள், வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கைகளுக்கு எதிராக மாற்று கொள்கைகளை இடதுசாரிக் கட்சிகள் உருவாக்கித் தந்துள்ளன.

மத வன்முறையைத் தடுக்கவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்தவும் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும்.

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை உறுதியுடன் எதிர்க்க வேண்டும்.

பொதுமக்களின் முதலீட்டுடன் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குதல், வேளாண்மையை பெருக்குதல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை நிறுத்துதல், குறிப்பிட்ட துறையினருக்கு வரியை அதிகரித்து நிதி ஆதாரத்தை பெருக்குதல் போன்றவை பொருளாதாரக் கொள்கையில் முக்கிய அம்சமாகும்.

நில உச்சவரம்பு சீர்திருத்தம், குறைந்தபட்ச ஆதரவு விலையை மேலும் பல பயிர்களுக்கு விரிவுபடுத்துதல், வேளாண் கடன்களை அதிகபட்சமாக 4 விழுக்காடு வட்டியில் வழங்குதல், மின்சாரம், சாகுபடி, விதை மற்றும் உரம் போன்றவற்றை பொதுமக்கள் முதலீட்டிற்கும் விரிவுபடுத்துதல் போன்றவையும் இடதுசாரிக் கட்சிகளின் கவனத்தில் அடங்கும்.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது விநியோக முறை, சர்க்கரை, தானியங்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் பொதுவிநியோக முறையில் வழங்குதல். உணவுக் கழக்ம் மூலம் உணவு தானியங்களை வழங்குதல், அவற்றை தனியார் வாங்குவதை தடுப்பது போன்றவற்றை இடதுசாரிக் கட்சிகள் ஆதரிக்கும்.

பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துதல், தொழிலாளர்கள் அதிகம் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவித்தல், பாரம்பரிய தொழில்களான கைத்தறி, சணல் போன்றவற்றை பாதுகாத்தல், சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை தடுத்தல், சிறு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களை ஊக்குவித்தல் ஆகியவை இடதுசாரிகளின் கொள்கையாகும்.

வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டில் பராமரிப்பது, நிதி வரத்து, நிதிச் செலவினம், முதலீட்டில் கண்டிப்பான நிலை, ஓய்வூதிய மற்றும் நிரந்தர வைப்பு நிதியை பங்குச் சந்தையில் எக்காரணம் கொண்டும் முதலீடு செய்வதில்லை என்பதில் உறுதி.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 100 நாட்கள் என்ற வரம்பை அகற்றுதல், அத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்துதல், கல்வி, சுகாதாரத் திட்டத்திற்கான முதலீட்டை அதிகரித்தல் போன்றவை இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடாகும்.

பணிபுரியும் தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருதல், குறைந்தபட்ச கூலியை அதிகரித்தல். தொழிலாளர் சட்டங்களை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துதல், வேலைநிறுத்த உரிமையைப் பாதுகாப்பது போன்றவையும் இடதுசாரிக் கட்சிகளின் நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுதல், வரதட்சிணையை ஒழித்தல், பெண்சிசுக் கொலையை ஒழிப்பது உள்ளிட்ட சமூக நீதியை பாதுகாத்தல்.

எந்தவொரு நாட்டுடனும் கூட்டு சேராத சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை, 123 ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்தல் போன்றவையும் இடதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் புதுடெல்லியில் பங்கேற்ற கூட்டத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil