நொய்டாவில், 20 வயது இளைஞர் ஒருவர் டாய்லெட்டை பயன்படுத்தி கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியதை அடுத்து படுகாயம் அடைந்துள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நொய்டா பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர், தனது வீட்டில் உள்ள டாய்லெட்டை பயன்படுத்திய போது, அவர் தண்ணீர் குழாயை அழுத்தியுள்ளார். அப்போது கழிப்பறையின் இருக்கை வெடித்து சிதறியது. இது ஒரு பெரும் சத்தத்துடன் தீப்பிடித்ததாகவும் தெரிகிறது.
அவர் டாய்லெட்டை பயன்படுத்தும்போது எந்தவிதமான எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது டாய்லெட் வெடித்ததற்கு, அதிலிருந்து வந்த மீத்தேன் வாயு தான் காரணம் என்றும், கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் மீத்தேன் வாயு வெளியே வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. டாய்லெட் வெடித்து சிதறியதால் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.