எக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது என்று மத்திய அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைத்தளம் 'எக்ஸ்' தளத்தில் கருத்துகள் மற்றும் உள்ளடக்கங்களை தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாகக் கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 79(3)(பி) என்பதன் கீழ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்திருந்தது.
இந்த செயல்முறை ஆன்லைன் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்துவதோடு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முரணாக உள்ளது. மேலும், பிரிவு 69ஏ விதிகளை மீறி, இணையதள உள்ளடக்கங்களை தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, "சமூக ஊடக தளங்களில் தீங்கிழைக்கும் பதிவுகளை கட்டுப்படுத்தும் சட்டம் குறித்து எக்ஸ் நிறுவனம் தவறான தகவல்களை பரப்புகிறது. மேலும், உரிமைக்கோரல்கள் என்ற பெயரில் நீதிமன்றத்தை தவறான வழியில் நகர்த்த முயற்சிக்கிறது" என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த வழக்கு ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் முக்கிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.