ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வாக்காளர்களுக்கு வாக்கு ஒன்றுக்கு ரூ.4000 பணம் கொடுத்தது வெட்டவெளிச்சமாகியுள்ளதால் இங்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரியான நஜீம் ஜைதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் வருமானவரி துறையினர் சோதனை மூலம் கிடைத்ததன் காரணமாக இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்றும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒன்று அதன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் 324ன் கீழ் 150, 30 மற்றும் 56 பிரிவு, மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1952 மற்றும் பொது உட்பிரிவு சட்டம் 1897, 21 பிரிவின் கீழ் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேசமயம். நேர்மையான சூழல் நிலவும் போது மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர் இறந்த பின்பு 6 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.