தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்த வேட்பாளர்களின் படங்களை வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒட்டலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருடன், புகைப்படமும் இடம்பெறவுள்ளது. இது எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, வேட்பாளர்கள் தொப்பி, கண்ணாடியை அணிந்த மாதிரியான புகைப்படங்களை இயந்திரத்தில் ஒட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கேரளத்தைச் சேர்ந்த வேட்பாளர் எம்.ராஜகோபாலன் என்பவர், உடல் நிலை கருதியும், தனது தனித்துவமான அடையாளமாகவும் காணப்படும் தொப்பியுடன் உள்ள தனது புகைப்படத்தை இயந்திரத்தில் ஒட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கூறினார்.
இதுபோன்று தொப்பியும், கண்ணாடியும் சாதாரண வகையில் இருக்கிறதா என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரி உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்திய பிறகு அந்த புகைப்படத்தை அனுமதிக்கலாம்.
இதுபோன்ற தொப்பிகளில் எந்தவித எழுத்தோ, சொற்களோ வேட்பாளரையோ அல்லது கட்சியையோ முன்னிறுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.