கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இறந்துள்ளதை அடுத்து கோவாவில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர். நேற்று மாலை இயற்கை எய்தினார்.
இதனையடுத்து அவரின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்ற்குள்ளாகவே கூட்டணிக் கட்சிகள் இரண்டுமுறை ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன்பின் டெல்லியில் இருந்து வந்த மூத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக கூட்டணி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து வரும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியும், கோவா ஃபார்வர்ட் கட்சியும் முதல்வர் பதவியைக் கேட்டுவருவதால் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களைப் பெற்றது., 13 இடங்களைப் பெற்ற பாஜக, தலா 3 இடங்களில் வென்ற மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி(எம்ஜிபி), கோவா பார்வேர்ட் கட்சி(ஜிஎப்பி), 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆதரவு தெரிவித்த கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மனோகர் பாரிக்கர் முதல்வர் என்றால் மட்டுமே ஆதரவு என்ற நிபந்தனையை விதித்திருந்தனர். ஆனால் இப்போது அவரின் மறைவால் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில் காங்கிரஸும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.