கர்நாடக மாநிலத்தில் 104 எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்து கொண்டு மெஜாரிட்டி இல்லாமல் பாஜக ஆட்சியை கைப்பற்றியது ஜனநாயக படுகொலை என்றும், 117 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணியை ஆட்சி அமைக்க கவ்ர்னர் அழைக்காதது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க சட்டப்படி கவர்னர் அழைத்தது தவறா? என்று பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிர்த்து பிரச்சாரம் செய்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி என்று கூறுவது மட்டும் சரியா என்று நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அமைச்சர் பதவி தருவதாக கூறி பாஜக கட்சியினர் அழைப்பு விடுத்தால் அதற்கு பெயர் குதிரை பேரம் என்றும், ஆனால் அதே காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் பதவி தருவதாக கூறி மதச்சார்பற்ற கட்சியின் தலைவருக்கு அழைப்பு விடுத்தால் அது ஜனநாயகம் என்று எப்படி கூறலாம் என்றும் கேள்வி எழும்பியுள்ளது.
மொத்தத்தில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய மூன்று கட்சிகளுக்குமே ஜனநாயகம் என்பது தேவையில்லாத ஒன்று. ஆட்சியை பிடிப்பதும், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது ஆகியவையே கொள்கைகள் என்பதும் தற்போதைய நிகழ்வுகள் உறுதி செய்யப்படுகிறது.