வாட்ஸ்அப் மூலம் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதாகவும், அதை சில நிமிடங்களில் சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளதாகவும் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகில் குமார் மஹந்தா என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து, அவரது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஒரு செய்தி நிறுவனத்திற்கு சென்றுள்ளது. அதில் அவசரமாக ரூ.1.98 கோடி ரூபாய் பணத்தை ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. நிறுவனத்தின் உரிமையாளரே வாட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பியதாக நம்பிய நிறுவனத்தின் அதிகாரி, அதில் கூறப்பட்டிருந்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியுள்ளார். அதன் பிறகுதான் இது மோசடி என்று தெரியவந்ததை அடுத்து, உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாக விசாரணைகளை தொடங்கியபோது, பெங்களூரில் உள்ள ஒரு வங்கியின் கிளையில்தான் அந்த பணம் சென்றது என்பதை தெரிந்துகொண்டு, உடனடியாக பணத்தை முடக்கினர். இதனை அடுத்து மோசடி செய்யப்பட்ட தொகை மீண்டும் வெற்றிகரமாக நிறுவனத்திற்கே திருப்பிச் செலுத்தப்பட்டது என்றும், போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்ததால் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மந்து தாஸ், பப்பாய் தாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.