தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தயங்குவதை போலவே வட மாநிலங்களிலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் விரும்பவில்லை. குறிப்பாக மோடி பிரதமர் வேட்பாளர் என்றால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஒருசில கட்சிகள் வெளிப்படையாக கூறியுள்ளது.
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தேர்தலுக்கு பின் தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டு பாஜக எங்களிடம் ஆதரவு கேட்டால் மோடி பிரதமர் என்றால் ஆதரவு தரமாட்டோம் என்றும் நிதின்கட்காரியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்தால் ஆதரவு தருவோம் என்றும் சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டாலும் பிரதமராக மோடி வருவது சந்தேகமே என கூறப்படுகிறது. இதேபோல் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் அதில் உள்ள ஒருசில கட்சிகளும், சிவசேனாவின் நிலைப்பாட்டையே எடுக்கும் என கூறப்படுகிறது.