போர் அச்சுறுத்தல்; வீரர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்: ராணுவத்தளபதி எச்சரிக்கை!
போர் அச்சுறுத்தல்; வீரர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்: ராணுவத்தளபதி எச்சரிக்கை!
நாட்டில் எந்த நேரத்திலும் போர் வரலாம், அதனால் வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ தொலைத்தொடர்பு பற்றிய 2 நாள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ராணுவத் தளபதி பிபின் ராவத் பேசுகையில், நாட்டிற்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், நமது ராணுவ வீரர்கள் எத்தகைய சூழலையும், சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் எல்லையில் தயாராக இருக்க வேண்டும். ராணுவத்தில் நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கொண்டு வர வேண்டும். ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
ராணுவத்துக்கு பயன்படுத்தும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், எளிமையாகவும், எடை குறைவாகவும், அதனை பராமரிப்பது சுலபமானதாகவும் இருக்க வேண்டும். எதிரிகள் சமூக வலைதளங்களை சாதகமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால் ராணுவத்தினர் இடையிலான தொலைபேசி உரையாடல் மற்றும் தரவு பரிமாற்ற நடைமுறையை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.