திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட கோவிந்தகோடி நாமம் என்ற திட்டத்தின் படி 10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம் பெற்றுள்ளனர் இளைஞர்கள் சிலர்.
இளைஞர்களிடையே ஆன்மீக நாட்டத்தை அதிகரிக்கவும், வளர்க்கவும் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கோவிந்தகோடி நாமம் என்ற திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் கோவிந்தா என்ற நாமத்தை 10 லட்சம் தடவை எழுதிக் கொண்டு வரும் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களுக்கு விஐபி ப்ரேக் தரிசனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கோவிந்த நாமத்தை எழுதுவதற்கான 200 பக்கம் கொண்ட நோட்டு புத்தகங்கள் தேவஸ்தான அலுவலகத்தில் விற்கப்பட்டது. இந்த நோட்டு புத்தகங்களில் 10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுத வேண்டுமென்றால் அதற்கு 26 நோட்டுகள் தேவைப்படும். மேலும் இதை முடிக்க சுமார் 3 ஆண்டுகளாவது ஆகும் என கூறப்பட்டது.
இந்நிலையில் 10 லட்சம் முறை கோவிந்த நாமத்தை எழுதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்தனா திருப்பதியில் விஐபி ப்ரேக் தரிசனம் பெற்றுள்ளார். அதேபோல மேலும் இருவரும் 10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி ப்ரேக் தரிசனம் பெற்றுள்ளனர். வரும் காலங்களில் மேலும் பல இளைஞர்களும், இளம்பெண்களும் 10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி ப்ரேக் தரிசனம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K