டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது நடந்த மோதல்கள் குறித்த விவரங்களை செய்தி முகமையான ஏஎன்ஐயிடம் அளித்த டெல்லி போலீஸ் உதவி ஆய்வாளர் மேத்தா லால், "சனிக்கிழமை அப்பகுதியில் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் மசூதி அருகே சென்றபோது, இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கல் வீச்சு நடந்தது. ஆனால், இரு குழுக்களும் அங்கிருந்து சென்றுவிட்டன," என்றார்.
தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் உள்ளதாக டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தீபேந்தர் பதக் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை 23 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் உட்பட 9 பேர் இந்த வன்முறையில் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். "சிலர் சமூக வலைதளம் மூலம் அமைதியை குலைக்க முயற்சி செய்கின்றனர். சமூக வலைதளங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்துவருகிறோம். சமூக வலைதளங்களில் தவறான பதிவுகளை இடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.