மணிப்பூரில் கடந்த சில வாரங்களாக அமைதி திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் வன்முறை ஏற்பட்டு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த மோதல் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மணிப்பூரில் மைதேயி என்ற இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டதாகவும், மூன்று குழந்தைகள் உள்பட ஆறு பேர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஜிரிபாம் என்ற பகுதியில் 13 பேர் நேற்று மாயமாகி உள்ளதாகவும், இதில் ஐந்து பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டு பேர் இறந்துள்ளனர் என்றும் ஆறு பேரை இன்னும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்ட இருவரின் சடலமும் கைப்பற்றப்பட்டதாகவும், பாதுகாப்பு படையினருக்கும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இதுவரை 10 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
காவல் நிலையம் மற்றும் பாதுகாப்பு முகாம்களை நோக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.