வேலைக்கு ஆகாத ஜல்லிக்கட்டு: தமிழர்களை சீண்டிய வாட்டாள் நாகராஜ்!
வேலைக்கு ஆகாத ஜல்லிக்கட்டு: தமிழர்களை சீண்டிய வாட்டாள் நாகராஜ்!
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் மத்திய அரசும் தமிழக அரசும் ஒத்துழைத்து அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த முன்வந்துள்ளது.
இதனையடுத்து இந்த ஜல்லிக்கட்டு குறித்து கர்நாடக அரசியல்வாதி வாட்டாள் நாகராஜ் சர்ச்சைக்குறிய வகையில் பேசி தமிழர்களை சீண்டியுள்ளார். இந்த வாட்டாள் நாகராஜ் காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக சர்ச்சைக்குறிய வகையில் பல கருத்துக்களை கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
நாடே தமிழர்களின் போராட்டத்தை கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர். கர்நாடகா மாநில மக்கள் கூட தமிழர்களின் இந்த போராட்டத்தை பாராட்டுகின்றனர். ஆனால் அந்த மாநில வாட்டாள் நாகராஜ் மட்டும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து கன்னட தனியார் தொலைக்காட்சி ஒன்று வாட்டாள் நாகராஜிடம் கருத்து கேட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழர்களின் போராட்டத்துக்கு பணிந்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
வேலைக்கு ஆகாத ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரும் மத்திய அரசு காவிரி போன்ற விஷயங்களில் ஏன் மவுனம் காக்கிறது. சித்தராமையா பலமுறை பிரதமரை பார்க்க முயன்றும் முடியவில்லை. ஆனால் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சென்ற உடனே சந்தித்து பேசுகிறார். மோடி என்ன இந்திய பிரதமரா அல்லது தமிழக பிரதமரா என காட்டமாக பேசினார் வாட்டாள் நாகராஜ்.