கொரோனாவை கட்டுப்படுத்த பொது மக்கள் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு கடைபிடிக்க தவறினால் மீண்டும் ஊரடங்கை சந்திக்க தயாராகுங்கள் என்றும் மகாராஷ்டிர மாநில முதல்வர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது என்றாலும் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டும் தினமும் 4000 முதல் 5000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 4000 பேருக்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சோதனையில் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார்
பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் முக கவசம் அணிவது தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு பின்பற்றவில்லை என்றால் மும்பை உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்
இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா பாதிப்பில் 70 சதவீதம் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் தான் இருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று கூறியிருப்பதால் இரு மாநிலங்களும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது