உத்தரகாண்ட் மாவட்டத்தில் பெண் ஒருவரை தாக்க வந்த புலியை அந்த பெண் அரிவாளால் தாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி அருகே உள்ள தமவுதுங்கா பகுதியை சேர்ந்தவர் லீலா லட்வால். இவரும் இவரது கிராமத்தை சேர்ந்த மற்ற பெண்களும் புல் வெட்டி வருவதற்காக அருகேயுள்ள காட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே லீலா லட்வால் புல் அறுத்திக் கொண்டிருக்கும்போது தனது அருகே ஏதோ மிருகம் நெருங்குவதை உணர்ந்துள்ளார்.
அவர் சுதாரிப்பதற்குள் பாய்ந்து வந்த புலி ஒன்று அவரது தலையை கவ்வி பிடித்துள்ளது. இதனால் லீலா நிலை தடுமாற தனது பற்களை மேலும் புலி இறுக்கத் தொடங்கியுள்ளது. அப்போது தனது கையில் இருந்த புல் அறுக்கும் அரிவாளால் லீலா தொடர்ந்து புலியை தாக்கியபடியே உதவி கேட்டு கத்தியுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அவருடன் வந்த மற்ற பெண்கள் அந்த இடத்திற்கு ஓடி வரவே புலி அந்த பெண்ணை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்துள்ளது. சிறிய அளவிலான காயங்களுடன் லீலா உயிர்பிழைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பாக குழந்தையை கவ்வி சென்ற சிறுத்தையை வீரத்தாய் துரத்தி சென்று குழந்தையை மீட்ட நிலையில் தற்போது புலியை அரிவாளால் தாக்கிய தப்பிய லீலா லட்வால் செய்தியும் வைரலாகியுள்ளது.