பக்தி யாத்திரை சென்ற பயணிகள் ட்ராக்டர் குளத்தில் விழுந்து மூழ்கியதில் பலியான சம்பவம் உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்து பக்தி பயணங்களை மக்கள் மேற்கொள்வது வழக்கம்.
அவ்வாறாக கான்பூரின் கதம்பூர் பகுதியை சேர்ந்த 50 பேர் சந்திரிகா தேவி கோவிலுக்கு ட்ராக்டர் ட்ராலியில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். கோவிலில் வழிபட்டுவிட்டு கான்பூரின் பாகாதுனா பகுதியில் ட்ராக்டர் வந்தபோது தடுமாறி குளத்தில் கவிழ்ந்தது.
உடனடியாக அங்கு விரைந்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பெண்கள், 11 குழந்தைகள் உட்பட 26 பயணிகள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், டிராக்டர்களை விவசாய பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.