ஜாகிரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 காட்டு யானையின் மீது ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
கேரளாவில் இருந்து வந்துக்கொண்டிருந்த ரயில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ரயில் பாதையை கடக்க முயன்ற 3 யானைகள் மீது கடந்த வாரம் மோதியது. இதில் சுமார் 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதன் இரண்டு குட்டி யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இந்நிலையில் அசாமின் மோரிகான் மாவட்டம் ஜாகிரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 காட்டு யானையின் மீது ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் சில அடி தூரம் சென்று 2 யானைகளும் இழுத்துச் செல்லப்பட்டன. ஒரு யானை தண்டவாளத்திலேயே மரணம் அடைந்தது. மற்றொரு யானை பள்ளத்தில் விழுந்து மரணம் அடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ரயில்கள் மோதியதில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்று ஆர்.டி.ஐ தகவல் அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.