ஆந்திராவில், பெற்றோர் அறியாமல் 16 வயது பள்ளி மாணவி கர்ப்பமான நிலையில் இருந்தார். இதையடுத்து அவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெற்றோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சித்தூர் நகரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவி திடீரென கர்ப்பமானார். ஆனால், வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் அதை மறைத்தார். எனினும், அவரின் எடை அதிகரித்து வருவதை கவனித்த பெற்றோர் சந்தேகமடைந்தனர். அதே நேரத்தில், பள்ளி ஆசிரியர்களும் மாணவியை பார்த்து சந்தேகித்தனர்.
இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, அவர் நிறைமாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனே, அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்வதற்கு மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால், திடீரென மாணவியரின் உடல்நிலை மோசமானது. உடனடியாக, மேல்சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பினர். ஆனால், அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகளின் கர்ப்பம் மற்றும் மரணம் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணமானவரை கண்டுபிடித்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.