ஏற்கனவே தமிழக அரசின் பாடத்திட்டமான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகிய நிலையில் நாளை அதாவது மே 26ஆம் தேதி காலை மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வை 11.86 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நடைபெற்றபோது பொருளாதார பாடத்தின் கேள்விகள் சமூக வலைத்தளத்தில் லீக் ஆனதால் மறுதேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து சி.பி.எஸ்.இ. கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'மாணவ-மாணவியர் கூகுளில் தங்களின் தேர்வு முடிவுகளை காணலாம். மேலும், சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களிலும் முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறினார். அதேபோல் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.