திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்காக சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ள நிலையில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்று நள்ளிரவு 12 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலரும் சொர்க்க வாசல் வழியாக சென்று தரிசனம் செய்தனர்
அதை தொடர்ந்து பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும் நிலையில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்த வண்ணம் உள்ளனர்.
தினசரி இலவச தரிசனம் வழியாக 50 ஆயிரம் பக்தர்களும், 300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 2 ஆயிரம் பக்தர்களும் நாள்தோறும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இலவச சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் விநியோகிக்கப்படும் நிலையில் அதை பெறுவதற்கு அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளதால் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.