வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தின் 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கடந்த சில வாரங்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது
அதேபோல் மத்தியில் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாஜகவும் முதல்முறையாக திரிபுராவில் ஆட்சியை பிடிக்க பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி இன்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது
திரிபுராவில் 60 தொகுதிகள் இருந்தாலும் ஒரு தொகுதியின் வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால் மீதியுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மொத்தம் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.