மகாராஷ்டிராவில் மண் கடத்தல் லாரி மண்ணைக் கொட்டி தொழிலாளர்களை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பசோடி சிவார் என்ற பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அப்பகுதியிலேயே சிறு கூடாரங்களை அமைத்து தங்கி வருகின்றனர். இந்நிலையில் அந்த வழியாக அதிகாலை 3 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று மணல் கடத்திச் சென்றுள்ளது.
அந்த லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் துரத்தி வந்த நிலையில் தப்பிப்பதற்காக அந்த லாரி டிரைவர் மணலை டிப்பரில் இருந்து கொட்டியுள்ளார். இருட்டில் அப்பகுதியில் தொழிலாளர்கள் கூடாரம் இருப்பதை கவனியாமல் மணலை கொட்டியதில் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.
அதை கண்டு மற்ற தொழிலாளர்கள் கத்தும் சத்தம் கேட்டு லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக மண்ணில் புதைந்து பலியானார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Edit by Prasanth.K