புனேவில் குடித்துவிட்டு சொகுசு காரை மோதி இருவரை கொன்ற வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற தாய் செய்த தில்லுமுல்லுகள் அம்பலமான நிலையில் தாயார் தலைமறைவாகியுள்ளார்.
கடந்த 19ம் தேதியன்று புனேவில் 17 வயது சிறுவன் ஒருவன் மது அருந்திவிட்டு உயர்ரக கார் ஒன்றை ஓட்டி சென்று பைக் மீது மோதியதில் அதில் பயணித்த இருவரும் பரிதாபமாக பலியானார்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் முதலில் நீதிமன்றத்தால் சாதாரணமாக விடுவிக்கப்பட்டார். ஆனால் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தகப்பனார் பெரிய தொழிலதிபர் என்பதால் இந்த வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த கடும் கண்டனங்கள் காரணமாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சிறுவன் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து ஆய்வு செய்ய அவரது ரத்த மாதிரிகள் பெறப்பட்டது. ஆனால் இந்த ரத்த மாதிரிகள் சோதனையில் முறைகேடு நடந்தது சமீபத்தில் அம்பலமானது. இதற்காக லஞ்சம் வாங்கிய இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பெறப்பட்ட ரத்த மாதிரி அந்த சிறுவனுடையதே அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது.
அந்த சிறுவனின் தாயார் ஷிவானி அகர்வால் தனது பையன் சிக்கிக் கொள்ள கூடாது என்பதற்காக தனது ரத்தத்தை மாற்றி வைத்து மோசடியாக சான்று பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை செய்ய ஷிவானை அகர்வாலை போலீஸ் தேடி வரும் நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு தவறை மறைக்க அடுத்தடுத்து பல தவறுகளை செய்யும் அவர்கள் மீது சரியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.