இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் பெண்களை ஏமாற்றி நிர்வாணமாக படம் எடுத்த சென்னை இஞ்சீனியர் தெலங்கானாவில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிபவர் க்ளெமண்ட் ராஜ் செழியன். இவருக்கு ஒரு மனைவி இருக்கிறார். அவரும் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரவு நேர வேலை என்பதால் காலையில் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அந்த சமயம் வேலைவாய்ப்பு இணையதளம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் க்ளெமண்ட். அதில் வேலைக்கு பதிவு செய்யும் பெண்களின் எண்ணிற்கு அழைத்து வரவேற்பாளர் பணிகள் இருப்பதாகவும் அதற்கு அழகான பெண்கள் தேவை என்பதால் போட்டோவை அனுப்பும்படி கேட்டிருக்கிறார்.
புகைப்படம் கிடைத்ததும் பெண் ஹெச்.ஆர் என்ற பெயரில் சில பல பெரிய நிறுவனங்களின் பெயரை சொல்லி அவர்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு முன் உங்களது நிர்வாண புகைப்படத்தை பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் பலருக்கு வீடியோ ரெக்கார்ட் செய்து அனுப்புமாறும் சொல்லியிருக்கிறார். அவர் சம்பளமாக அதிக தொகை தருவார்கள் என்று சொன்னதை நம்பி அந்த பெண்களும் அப்படியே செய்திருக்கிறார்கள். பின்னர் அந்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு அந்த பெண்களை மிரட்டியிருக்கிறார் க்ளெமண்ட்.
இதில் பாதிக்கப்பட்ட ஹைதராபாத் பெண் ஒருவர் அவன் சொன்னதையெல்லாம் அவன் மிரட்டலுக்கு பயந்து செய்து வந்திருக்கிறார். கடைசியில் க்ளெமண்டின் மிரட்டல்களை பொறுத்து கொள்ள முடியாத அவர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த மியாப்பூர் போலீஸார் க்ளெமண்டின் எண்ணை வைத்து அவனை பிடித்து கைது செய்தனர்.
அவனது மொபைலை ஆராய்ந்தபோது சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்களின் ஆயிரக்கணக்கான நிர்வாண புகைப்படங்களும், வீடியோக்களும் இருப்பதை கண்டு போலீஸார் அதிர்ந்தனர். விசாரணையில் மேற்கண்ட சம்பவங்களை ஒப்புக்கொண்டுள்ளார் க்ளெமண்ட். இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில் “ஹைதராபாத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் க்ளெமண்டை கைது செய்தோம். ஆனால் இவர் போனில் வேறு பெண் பெயரில் பேசி பலரை ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவங்கள் அவர் மனைவிக்கே தெரியாது” என்று கூறியுள்ளார்கள்