தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளன.
அவ்வாறாக தெலுங்கானா மாநிலம் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த வேட்பாளர் பிரபாகர் ரெட்டி வாக்கு சேகரிக்க சென்றார். ஏற்கனவே எம்.பியாக இருந்த பிரபாகர் ரெட்டி வரும் சட்டமன்ற தேர்தலில் துபாக் பகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக தேர்தல் பரப்புரைக்காக சித்திப்பேட் பகுதிக்கு சென்ற பிரபாகர் ரெட்டியை மர்ம நபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கத்தியால் குத்திய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.